விவசாயியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
விவசாயியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
திருப்பூர்
திருப்பூர் அருகே விவசாயியிடம் ரூ.1 கோடி கடன் வாங்கிக்கொடுப்பதாக கூறி ரூ.10 லட்சத்தை மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ரூ.10 லட்சம் மோசடி
பல்லடம் வடமலைபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). விவசாயி. இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த மே மாதம் 26-ந் தேதி முத்ரா பைனான்ஸ் என்ற பெயரில் ரூ.1 கோடி கடன் தருவதாக குறுஞ்செய்தி வந்தது.
இதைப்பார்த்த குணசேகரன், மறுநாள் முத்ரா பைனான்ஸ் நிறுவனத்துக்கான செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது ரூ.1 கோடி கடன் பெற முன்பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். இதை நம்பிய குணசேகரன் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி வரை முன்பணமாக ரூ.10 லட்சம் கட்டியுள்ளார். ஆனாலும் அவருக்கு கடன் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட முத்ரா பைனான்ஸ் நிறுவனத்தை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
2 பேர் கைது
அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை குணசேகரன் அறிந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி முன்னிலையில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள், ஏட்டு சந்தானம், போலீசார் கருப்பையா, முத்துக்குமார், குமரவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பீகாரை சேர்ந்த முகமது ஜபீர் அன்சாரி ( 27), டெல்லியை சேர்ந்த ஹரீஸ் குமார் (21) ஆகிய 2 பேரையும் டெல்லியில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 செல்போன்கள், 2 மடிக்கணினி, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.