இருவழிச்சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க இருவழிச்சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க இருவழிச்சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்வே கேட்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ெரயில்நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் பலமுறை ெரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நெடுஞ்சாலை பயணிகளின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது.இந்த நிலைக்கு நிரந்தர தீர்வு மாற்றுவழி பாதைகள் தான் என அதற்கான கோரிக்கை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசுக்கு விடுக்கப்பட்டு வந்தது.
நான்கு வழிச்சாலை திட்டம்
கடந்தகால தி.மு.க., காங்கிரஸ் மத்திய கூட்டணி ஆட்சியில் அப்போதைய மத்திய மந்திரிகள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், டி.ஆர்.பாலு, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.பி.ராசமாணிக்கம் ஆகியோரின் முயற்சியின் பேரில் சுற்றுச்சாலை அமைக்க முதலில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை மூலம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது.பின்னர் 4 வழிச்சாலைத்திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போது அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுச்சாலைத் திட்டம் கைவிடப்பட்டது.
நாகை வரை...
நான்கு வழிச்சாலைத்திட்டபணிகள் தொடங்கி நடந்து வந்தது.திருச்சி முதல் தஞ்சாவூர் வரை பணி முதலில் நிறைவடைந்தது.தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பணிகள் ஏதோ காரணத்தால் தேக்கம் ஏற்பட்டது. அந்த திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இருவழிச்சாலைத் திட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த பணியும் முழுவதுமாக நிறைவேற்றபடாமல் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் பகுதியில் கோயில் வெண்ணியிலிருந்து, நார்த்தாங்குடி, அபிவிருத்தீஸ்வரம், ஊர்குடி வழியாக இந்த சாலை நாகப்பட்டினம் வரை செல்கிறது.
விரைவுபடுத்த கோரிக்கை
இந்நிலையில் நீடாமங்கலம் அருகே மூணாறுதலைப்பு பகுதியில் பெரியவெண்ணாற்றின் குறுக்கே பன்னிமங்கலத்தையும் குருவாடி கிராமத்தையும் இணைக்கும் பாலம் கட்டும் பணி முழுமையாக நிறைவேறாமல் உள்ளது.இதைப்போல அபிவிருத்தீஸ்வரம், ஊர்குடி பகுதியிலும் ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணி முழுமை பெறாமல் உள்ளது.கோவில்வெண்ணி கிராமத்திலிருந்து நகர் வரை செல்லும் சாலை அமைக்கப்பட்ட போதும் நகர் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு தார்ச்சாலை ஏதோ காரணத்தால் அமைக்கப்படாமல் உள்ளது.இந்தசாலை பணிகள் பாலம் கட்டும் பணிகள் முழுமை பெற்று போக்குவரத்திற்கு சாலை திறந்து விடப்பட்டால் நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எனவே இருவழிச்சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.