அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் கோப்பில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின்...!
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள், அமைச்சர் இருக்கையில் அமர வைத்தனர்.
சென்னை,
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து தலைமைச்செயலகம் புறப்பட்டார்.
தலைமைச்செயலகம் வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலி ஆகியோர் இருக்கையில் அமர வைத்தனர். இருக்கையில் அமர்ந்து அலுவலக பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். மேலும் மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர், அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் கோப்புகளில் கையெழுத்திட்டார். 2022-23ஆம் ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து கையெழுத்திட்டார். விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார். மேலும் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்ற நிவேதிதா நாயருக்கு ரூ.4 லட்சம் காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.