உதயநிதி ஸ்டாலினை நம்பி நாடும், இயக்கமும் இருக்கிறது-அமைச்சர் கே.என்.நேரு உருக்கம்
உதயநிதி ஸ்டாலினை நம்பி நாடும், இயக்கமும் இருக்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு சேலம் அருகே நடந்த அரசு விழாவில் உருக்கமாக பேசினார்.
அரசு விழா
சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியில் நேற்று நடந்த அரசு விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து உருக்கமாக பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
கடந்த 1989-ம் ஆண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களை முதன் முதலாக உருவாக்கியவர் மறைந்த முதல்-அமைச்சர் மு.கருணாநிதி. அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி வகித்தபோது, அவர் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுழல் நிதியுதவியை வழங்கினார். அதாவது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விழா மேடையில் சுமார் 4 முதல் 5 மணி நேரம் கால் வலிக்க நின்றுக்கொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனு தவியை வழங்கினார்.
அவரை தொடர்ந்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தம்பி உதயநிதி ஸ்டாலினும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவியை வழங்கி வருகிறார். முதன் முதலில் திருச்சியில் நடந்த விழாவில் சுமார் 3 ஆயிரம் பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்றைய தினம் (நேற்று) சேலத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர் கடன் உதவியை வழங்கி உள்ளார்.
நாடும், இயக்கமும்...
அமைச்சர் உதயநிதி, உங்களுடைய பணி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும். சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அனைவருக்கும் தெரியும், உங்களை (உதயநிதி ஸ்டாலின்) நம்பி இந்த நாடும், இயக்கமும் இருக்கிறது. நீங்கள் நினைப்பது போன்று மிகப்பெரிய வெற்றியை சேலம் மாவட்டத்தில் பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.