உடுமலை பகுதியில் இறவைப் பாசனத்தில் சோளம் சாகுபடி


உடுமலை பகுதியில் இறவைப் பாசனத்தில் சோளம் சாகுபடி
x
திருப்பூர்


உடுமலை பகுதியில் இறவைப் பாசனத்தில் சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

துரித உணவு

நமது முன்னோர்களின் உணவு முறையில் சோளம், கம்பு, ராகி, குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு முக்கிய இடம் இருந்தது. அதுவே அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாக இருந்தது. ஆனால் தற்போது நாகரீகம் என்ற பெயரில் உண்ணப்படும் துரித உணவு வகைகளில் பலவும் உடலுக்குக் கேடு தருவதாகவே உள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதிப்புக்குப் பிறகு உடல் நலம் குறித்த அக்கறை பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை சார்ந்த உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு மவுசு கூடியுள்ளது. இதனையடுத்து உடுமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இயற்கை உணவகங்கள், சிறுதானிய உணவு வகைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை பலரும் விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் சிறுதானிய வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, 'பொதுவாக கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர் வகைகள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவையாகும். இதனால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மானாவாரியில் இவற்றை பயிர் செய்வது வழக்கமாகும். ஆனால் தற்போது எல்லா பருவத்திலும் இவற்றை இறவைப் பாசனத்தில் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளோம்.

இயற்கை முறை

மானாவாரியை விட இறவைப் பாசனத்தில் பயிர் நன்கு செழித்து வளர்கிறது. அத்துடன் கதிர்கள் நன்கு பால் பிடித்து அதிக மகசூல் கொடுக்கிறது. இதனால் காய்கறிப் பயிர்கள் உள்ளிட்டவை சாகுபடி செய்வதற்கு போதிய தண்ணீர் இல்லாத விவசாயிகளின் தேர்வாக சிறுதானியப் பயிர்கள் மாறி வருகிறது. அதேநரத்தில் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பராமரிப்புச் செலவு பெருமளவு குறைகிறது. அதேநேரத்தில் இயற்கை முறை சாகுபடிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது. பறவைகளுக்கும் இவை விருப்ப உணவாக உள்ளதால் சற்று சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூச்சி மருந்துகளின் பயன்பாட்டால் பல பறவை இனங்கள் படிப்படியாக அழிந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவற்றை மீட்டெடுக்கக் கிடைக்கும் வாய்ப்பாக விவசாயிகள் இதனை எண்ணிக் கொள்ளலாம்' என்று விவசாயிகள் கூறினர்.


Next Story