பாதியில் நின்ற பணிமீண்டும் தொடங்கியது
உடுமலை நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, குழிகள் தோண்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள்
உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்டு 103 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதற்கு நூற்றாண்டு விழா வளர்ச்சிப்பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் (ஓடை) தூர்வாருதல்,
மத்திய பஸ் நிலையம் அருகே பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின் விளக்குகள்அமைத்தல், வாரச்சந்தையைமேம்படுத்துதல், 5 பூங்காக்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக மொத்தம் ரூ.48 கோடியே 87 லட்சம் நிதி கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் ஒதுக்கப்பட்டது.
நகராட்சி வாரச்சந்தை
இதில் உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகளைமேற்கொள்ள
ரூ.6 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நாட்களில் கூடும். இந்த வாரச்சந்தை வளாகத்தின் ஒருபகுதியில் தினசரி காய்கறிசந்தையும், அதையடுத்து காய்கறி கமிஷன் மண்டிகளும் உள்ளன. இந்த காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் வந்து செல்லும்.அதேசமயம் திங்கள்கிழமை தோறும் கூடுகிற வாரச்சந்தை வளாகத்தில் கடைகள் பழுதடைந்தும், பராமரிப்பு இல்லாமலும் பயனற்று இருக்கின்றன. இந்த நிலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் கடந்த 4மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடைகளை கட்டுவதற்கான கான்கிரீட் தூண்களை அமைப்பதற்காக பல மெகா அளவிவிலான குழிகள் தோட்டப்பட்டதுடன் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
நிர்வாக இயக்குனர் ஆய்வு
இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்கு கடந்தமேமாதம் வந்திருந்த நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையன், நூற்றாண்டு விழா நினைவு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது இந்த நகராட்சி வாரச்சந்தைக்குள் கடைகள் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டதுடன், அப்படியே நின்றுவிட்ட நிலையை பார்வையிட்ட அவர், அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் பணிகளை விரைவில் செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.