அடுத்தவர்களின் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்
விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உடுமலை கல்லூரியில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் நடிகை ஆர்.காயத்ரி ரகுராம் பேசினார்.
சுதந்திர தின அமுத்ப்பெருவிழா
பிட் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நுண்கலை மன்றம் ஆகியவற்றின் சார்பில் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் ந.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். கல்லூரியின் நுண்கலை மன்ற உறுப்பினரான பேராசிரியை பியூலா ஆக்னஸ் வரவேற்றார். ஸ்கில் இந்தியா ஒருங்கிணைப்பாளர் மங்கலம் என்.ரவி, முன்னாள் நகராட்சி தலைவர் ஜோதீஸ்வரி கந்தசாமி, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் பி.சத்யம்பாபு, எரிசனம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுப்புற ஆர்வலர் டி.மலர்கொடி வாழ்த்துரை வழங்கினார்.
சுதந்திர இந்தியாவில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் நடிகை ஆர்.காயத்ரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன்படி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடுங்கள்.
திருப்திப்படுத்த முடியாது
ஒவ்வொருவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்கக்கூடாது. அப்படி நீங்கள் சுதந்திரமாக இருந்தால் உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. இப்போது இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக மாறியுள்ளது. இதை நல்ல விதத்தில் பயன்படுத்துங்கள். நீங்கள் அனைவரும்தான் இந்தியாவின் எதிர்காலம். விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது.
சில விஷயங்களை பெற்றோரிடம் பரிமாறலாம். சில விஷயங்களை நண்பர்களிடம் பரிமாறலாம். நான் அரசியலுக்கு வருவேன். பிரதமர் மோடியை சந்திப்பேன் என்று நினைத்து பார்த்ததில்லை. எனக்கு நடிப்பதை விட நடனத்தில்தான் ஆர்வம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் கையில் தேசிய கொடியுடன், மாணவிகளுடன் நடனமாடினார்.