கடைகள் ஏலம் போகாததால் ரூ.7½ கோடி வருவாய் இழப்பு
உடுமலை, ஆக.31-
உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான பல கடைகள் ஏலம்போகாததால், நகராட்சிக்கு ரூ.7½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
நகராட்சி கூட்டம்
உடுமலை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்டஅரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மு.மத்தீன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் சு.கலைராஜன், மூத்தகவுன்சிலர் செ.வேலுச்சாமி, கவுன்சிலர்கள் மு.ஜெயக்குமார், ராமதாஸ், டி.ரீகன், டி.ஆறுச்சாமி, கே.அஸ்வதி விக்ரம், கே.சாந்தி கிருபாகரன், சி.விஜயலட்சுமி, எஸ்.சவுந்தரராஜன், ஜெ.ஷாஜாதி பர்வீன், சகுந்தலா, ரமலா உள்பட பலர் பேசினர்.
ரூ.7½ கோடி வருவாய் இழப்பு
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
உடுமலை நகராட்சிக்கு சொந்தமான கடைகள் 265 உள்ளன. இதில் 66 கடைகள் ஏலம் போகாமல் காலியாக உள்ளன. ஏலம் போகாமலிருப்பதற்கு என்ன காரணம். முன்பு தனியார் கடைகளை விட நகராட்சி கடைகளுக்கு வாடகை குறைவாக இருந்தது.அதனால் நகராட்சி கடைகள் ஏலம் போனது. ஆனால் இப்போது தனியார் கடைகளுடன் ஒப்பிடும்போது நகராட்சி கடைகளுக்கும், தனியார் கடைகளுக்கும் வாடகை வித்தியாசம் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். அதனால் கட்டுபடியாகாததால் இப்போது நடந்து வரும் சிலகடைகளும் காலி செய்யக்கூடிய நிலையில் உள்ளதாக நகராட்சி கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடைகள் ஏலம் போகாமல் காலியாக இருப்பதால் நகராட்சிக்கு ரூ.7½ கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பை தவிர்க்கும் வகையில், காலியாக உள்ள நகராட்சி கடைகள் உள்ள பகுதிகளில் தற்போதைய நிலவரம் குறித்து மதிப்பீடு தயாரித்து அதற்கு ஏற்ப வாடகைக்கு விடலாம்.இதற்காக குழு அமைக்கலாம்.
வாரச்சந்தை
நகராட்சி வாரச்சந்தைக்குள் சாலைப்பகுதியில் கடைகளை வைத்துள்ளனர். அதனால் சந்தைக்குள் காய்கறிகளை கொண்டு வரும் வாகனங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வந்துசெல்லமுடியாத நிலை உள்ளது. அதனால் சந்தைக்குள் சாலைப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களுக்கு தனி இடம் ஒதுக்கித் தரலாம். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் உடுமலை நகரில் அமைந்துள்ள அரசு மற்றும் பிற துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் மாவட்ட தலைநகரான திருப்பூர் சென்றடைய 1½ மணிநேரம் ஆகிறது. இந்த நிலையில் உடுமலை நகரில் பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இருந்து திருப்பூர் வரை உள்ள சாலையை, விரைவு வழி சாலையாக மாற்றியமைத்தால் பயண நேரம் ஒரு மணி நேரமாக குறையும்.
அத்துடன் நகர வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். அதனால் உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் வரை உள்ள சாலையை விரைவு வழி சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என்று அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறையை கேட்டுக்கொள்வது என்பது உள்பட 115 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பு தீர்மானம்
கூட்டத்தில் மூத்த கவுன்சிலர் செ.வேலுச்சாமி (முன்னாள் நகராட்சி தலைவர்)ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.அதன் விவரம் வருமாறு:- தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் சார்ந்த சில திட்டங்களை சட்டசபையில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீட்தேர்வு, பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட சில தீர்மானங்களுக்கு ஆளுனர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதை இந்த மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.அத்துடன் ஆளுனரை தமிழக அரசில் இருந்து விடுவிக்குமாறு மத்திய அரசைக்கேட்டுக்கொள்வது என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.