உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 160 வழக்குகளில் ரூ.3 கோடியே 90 லட்சத்துக்கு சமரச தீர்வு
உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 160 வழக்குகளில் ரூ.3 கோடியே 90 லட்சத்துக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலையில் சப்-கோர்ட்டு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2 ஆகிய 4 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது.
உடுமலை சப்-கோர்ட்டில் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான சப்-கோர்ட் நீதிபதி எம்.மணிகண்டன் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல் ஆர்.மகேஸ்வரனும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி (டிஸ்ட்ரிக் முன்சீப்) வி.எஸ்.பாலமுருகன் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல் என்.மணிகண்டனும் இடம் பெற்றிருந்தனர். ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு கே.விஜயகுமார் தலைமையிலும், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
160வழக்குகளுக்கு தீர்வு
உடுமலையில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி தொடர்ந்த70வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 45 வழக்குகளுக்கு ரூ.2கோடியே 64 லட்சத்து 82 ஆயிரத்துக்கு 200-க்கு தீர்வுகாணப்பட்டது. சொத்து சம்பந்தப்பட்ட 20 சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 2வழக்குகளில் ரூ.6 லட்சத்து 5 ஆயிரத்து 150-க்கு தீர்வு காணப்பட்டது. சமரசத்திற்குரிய சிறு குற்ற வழக்குகள் 130 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 91 வழக்குகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 900-க்கு தீர்வு காணப்பட்டது.
வங்கிகளில் கடன் பெற்று, கடன் தொகையை திருப்பிச்செலுத்தாமல் வாராக்கடனாக இருந்து வந்தவர்களின் கடன் தொகையை வங்கிகளில் செலுத்தி கணக்கை நேர் செய்வதற்காக சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 40 பேருடைய வங்கிக்கடன் குறித்து பேசப்பட்டது. இதில் 7 பேரின் கணக்குகளுக்கு ரூ.36 லட்சத்து19 ஆயிரத்து 230-க்கு தீர்வு காணப்பட்டது. 50 காசோலை மோசடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 10 வழக்குகளில் ரூ.66 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், 26 ஜீவனாம்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 5 வழக்குகளில் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் தீர்வு காணப்பட்டது.
ரூ.3 கோடியே90 லட்சம்
உடுமலையில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்ற 4 அமர்வுகளில் மொத்தம் 336 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 160 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 90 லட்சத்து 19 ஆயிரத்து 480-க்கு தீர்வு காணப்பட்டது.
உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் அரசு வக்கீல்கள் எம்.சேதுராமன், சி.ரவிச்சந்திரன், மற்றும் மூத்த வக்கீல்கள், இளம் வக்கீல்கள் மற்றும் இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.