உழவர் சந்தை முன்பு போக்குவரத்து நெரிசல்
உடுமலை கபூர்கான் வீதியில், உழவர் சந்தைக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பெதுமக்கள் சிரமத்திற்குள்ளாயினர்.
உழவர் சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வார நாட்களில் தினசரி 65 முதல் 70 விவசாயிகள் வரை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் 75 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவருகின்றனர்.
வாரநாட்களில் தினசரி 22 டன்கள் வரையும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் 25 டன்களுக்கு அதிகமாகவும் காய்கறிகள் விற்பனையாகும். இந்த காய்கறிகளை வாங்குவதற்கு காலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம், மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும்.
போக்குவரத்து நெரிசல்
அதிகாலை முதல் உழவர் சந்தை செயல்படும் நேரமான காலை11மணிவரை, உழவர் சந்தைக்கு முன்பு வியாபாரிகள் தற்காலிக காய்கறிகடைகளை வைத்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு முன்பு காய்கறிகடைகள் இருப்பதால் காய்கறிகளை வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமம்படுகின்றனர். இந்த சாலையில் உழவர் சந்தைக்கு முன்பு உள்ள காய்கறிகடைகள், மற்றும் அந்த பகுதியில் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்படும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.உழவர் சந்தைக்கு வெளியே, அந்த இடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் தற்காலிக கடைகளை யாரும் வைக்கக்கூடாது என்று அரசாணை உள்ளதாகவும், ஆனால் உழவர் சந்தைக்கு முன்பு வியாபாரிகள் தற்காலிக காய்கறிகடைகளை வைப்பதால், தங்களுக்கு விற்பனை பாதிக்கப்படுவதாகவும் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கடும் அவதி
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை உழவர் சந்தைக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்காலிக காய்கறிகடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை வைத்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமையாதலால் உழவர் சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது.26 டன் காய்கறிகள் விற்பனையானது.
பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை உழவர் சந்தைக்கு முன்பு நிறுத்தியிருந்தனர். தற்காலிக காய்கறிகடைகள் மற்றும் நிறைந்திருந்த இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றால் நேற்று காலை உழவர் சந்தைக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.