நகராட்சிக்கு சொந்தமான ரூ.30 லட்சம் இடம் மீட்பு


நகராட்சிக்கு சொந்தமான ரூ.30 லட்சம் இடம் மீட்பு
x
திருப்பூர்


உடுமலை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றியதுடன் ரூ.30 லட்சம் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது.

நகராட்சி தீவிரம்

புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கப்படும் போது பூங்கா, நூலகம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு சொந்தப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவ்வாறான இடங்களை ஆய்வு செய்து மீட்கும் நடவடிக்கையில் தற்போது நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் உடுமலை நகராட்சிக்குட்பட்ட கல்யாணி அம்மாள் லே அவுட் பகுதியில் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகாலட்சுமி நகர் பகுதியில் பொதுப்பயன்பாட்டு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

இடித்து அகற்றம்

இந்த நிலையில் உடுமலை நகராட்சி 10-வது வார்டு பகுதியில் பழனி-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஸ்ரீநகர் மனைப்பிரிவில் நகராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் பூங்கா இடத்தில், கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக ஆக்கிரமித்து கடைக்கட்டிடம் கட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர், பொது சுகாதார பணியாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றினர். இதனால் ரூ.30 லட்சம் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டதுடன், போக்குவரத்து இடையூறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story