மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
உடுமலை,
உடுமலை அருகே உள்ள பெரியகுளத்தில் பிடிக்கப்படும் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பெரியகுளம்
உடுமலை தளி சாலையில் போடிபட்டி, அண்ணாநகரை அடுத்துள்ளது பெரியகுளம். இந்த குளத்தில் கட்லா, ஜிலேபி, மிருகால், ரோகு ஆகிய வகை மீன்கள் உள்ளன. இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்து கொள்வதற்கான உரிமம் பொது ஏலத்தில் விடப்பட்டதில் கொழுமத்தை சேர்ந்தவர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஏலம் எடுத்து மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்காக இந்த மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குளத்தின் கரைப்பகுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் தினசரி மாலை நேரத்தில் பரிசல்களில் குளத்திற்குள் சென்று வலைகளை விரித்து வைத்துவிட்டு கரைக்கு திரும்புகின்றனர்.
வலையில் சிக்கும் மீன்கள்
அவர்கள் அடுத்தநாள் அதிகாலை 4.30 மணியளவில் பரிசல்களில் குளத்திற்குள் சென்று, முதல் நாள் மாலை குளத்திற்குள் விரித்து வைத்திருந்த வலைகளில் சிக்கியுள்ள மீன்களுடன், வலைகளை கரைப்பகுதிக்கு கொண்டு வருகின்றனர். அந்த வலையில் சிக்கியிருக்கும் மீன்களை வலையில் இருந்து எடுக்கின்றனர். இதில் சில நாட்கள், சில இடங்களில் மீன்கள் அதிகமாக சிக்கும். சில நாட்கள் குறைவாக சிக்கும். இப்போது குளத்தில் ஓரளவு தண்ணீர் அதிகமாக உள்ளதால் மீன்கள் குறைவாகவே சிக்கி வருகின்றன.
இந்த மீன்கள் உயிருடன் இருக்கும் என்பதால், மீன்களை வாங்குவதற்கு, பரிசல்கள் கரைப்பகுதிக்கு வருவதற்கு முன்பே பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, மீன்கள் வந்ததும் வாங்கி செல்வது வழக்கம். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வரிசை எண்படி ஒரு டோக்கனுக்கு 5 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பொது மக்கள் கூட்டம்
அதன்படி நேற்று மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் அதிகாலையில் 3 பரிசல்களில் குளத்திற்குள் சென்று, வலைகளில் சிக்கியிருந்த மீன்களுடன் கரைக்கு வந்தனர். நேற்று மீன்கள் குறைவாகவே சிக்கியிருந்தது. குளத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில், குளத்தில் தண்ணீர் மட்டம் குறையும் போது, வலைகளில் மீன்கள் அதிகம் சிக்கும்.