திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவிலில்பகல்பத்து உற்சவம் தொடங்கியது


திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவிலில்பகல்பத்து உற்சவம் தொடங்கியது
x
திருப்பூர்


உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல்பத்து பாசுரங்கள் உற்சவம்தொடங்கியது. அடுத்தமாதம் (ஜனவரி) 2-ம்தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.

உடுமலை திருப்பதி

வேங்கடேச பெருமாள் கோவில் உடுமலை தளிசாலையில் பள்ளபாளையம் அருகே செங்குளம் கரைப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடத்தில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடக்கிறது. விழாவையொட்டி பகல்பத்து உற்சவம் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்நாளில் கோவில்வளாகத்தில், பெரியாழ்வார் திருமொழி 200 பாசுரங்கள் பாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வேங்கடேச பெருமாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று தினசரி காலை 6.30 மணிமுதல் 8.30 மணிவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், திருமாலை,திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிணுள் சிறுத்தாம்பு, பெரியதிருமொழி, திருநெடுந்தாண்டகப்பாசுரங்கள் பாடப்படுகிறது.பகல்பத்து உற்சவம் நிகழ்ச்சி ஜனவரி 1-ம்தேதி வரை நடக்கிறது.

சொர்க்கவாசல் திறப்பு

வருகிற ஜனவரி மாதம் 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இராப்பத்து உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தினசரி மாலை5.30 மணிமுதல் 7 மணிவரை திருவாய்மொழி பாசுரங்கள் பாடப்படுகிறது. 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிவரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை இயற்பா, தேசிக பிரபந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story