உடுமலை ரெயில் நிலையத்தில் பயணிகள் தரையில் அமரும் அவலம்
உடுமலை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. இங்கு இருக்கை தட்டுப்பாடு இருப்பதால் பயணிகள் தரையில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நகரம்
உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம், நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி போன்ற தொழில்கள் பிரதானமாக உள்ளன. இங்கு விவசாய தொழிலில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் ஈடுபட்டு வரும் நிலையில், பிற தொழில்களில் உடுமலை சுற்றுவட்டார பகுதி மற்றும் பிற மாவட்ட மக்களும் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் வட மாநில தொழிலாளர்களும் கணிசமான அளவில் வேலை பார்த்து வருகின்றனர். வளரும் நகரமாக உடுமலை இருந்து வருவதால் இங்கு நகரப் பகுதி மற்றும் அதையொட்டி உள்ள ஊரகப் பகுதிகளையும் உள்ளடக்கி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
பொதுவாக ஒரு நகரின் வளர்ச்சியில் போக்குவரத்து வசதியும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் சாலை வசதி ஓரளவு இருந்தாலும், ரெயில் போக்குவரத்து வசதி என்பது நகரின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் இல்லை என்பதே உண்மை. இங்கு அடிப்படை வசதிகள் மோசமான அளவிலேயே உள்ளன.
ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்து நிற்கின்றன. குறிப்பாக 1-வது நடைமேடையை ஒட்டியவாறு செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் ரெயிலுக்காக காத்து நிற்கும் பயணிகளுக்கு விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குடிநீர் பிரச்சினை
இதேபோன்று இங்கு பயணிகளுக்கு போதுமான குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. நடைமேடைகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல குடிநீர் குழாய்கள் பயன்படுத்த முடியாத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால் ரெயில் பயணத்தில் இருக்கும் பயணிகள் குடிநீருக்காக இங்கு இறங்கும்போது, கிடைக்கும் சில நிமிடங்களில் குடிநீர் குழாயை தேடி பரிதாபமாக ஓடி அலைகின்றனர். இதேபோன்று இங்கு பயணிகளின் வசதிக்காக வைக்கப்பட்டுள்ள ஒரு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது.
கழிப்பிட பற்றாக்குறை
இதேபோன்று இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே ஒரு கழிப்பிடம் மட்டும் உள்ளது. கடந்த காலங்களில் அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த கழிப்பிடம் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் அதற்கு தகுந்த அளவு கழிப்பிட வசதி இல்லை. கட்டண கழிப்பிடம் மட்டுமே இருப்பதால் இலவச கழிப்படமும் கட்ட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது இருக்கும் கட்டண கழிப்பிடம் சில நேரங்களில் பூட்டி கிடப்பதால் பயணிகள் பொதுவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று இந்த ரெயில் நிலையத்தில் போதுமான மின்விளக்கு வசதிகளும் இல்லை.
தரையில் அமரும் பயணிகள்
இதேபோன்று ரெயில் நிலையத்தில் இருக்கை வசதியும் மிகக் குறைவாக உள்ளன. இதனால் பெரும்பாலான நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு இடமின்றி தரையில் அமரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் உடுமலையிலிருந்து பணிகளை முடித்துக் கொண்டு ஊருக்கு செல்லும் பெண் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் நடைமேடையிலும், அங்குள்ள படிக்கட்டுகளிலும் சிரமத்துடன் தரையில் அமர்ந்திருக்கின்றனர். இதேபோன்று ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. நடைமேடைகளின் பெரும் பகுதி மேற்கூரையின்றி திறந்த வெளியாக உள்ளது.
வெயில், மழையால் அவதி
இதன் காரணமாக பயணிகள் வெட்ட வெளியில் ரெயிலுக்கு காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. வெயில், மழையால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு புதிதாக மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் இங்கு வரும் ரெயில்களின் நேரம், அவை நிற்கும் நடைமேடை போன்ற விவரங்கள் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும் நிலையில், பெட்டிகளின் விவரம் (கோச் பொசிசன்) அறிவிக்கப்படுவதில்லை.இதனால் எங்கு நிற்பது என தெரியாமல் குழப்பம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு தெரு நாய்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
'என்னென்னமோ நடக்குது'
ரெயில் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து ஜெயா டேவிட்சன், ஜாஸ் லூயிஸ் மற்றும் சில பயணிகள் கூறியதாவது:-
இங்கு ரெயில் நிலையத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் சிலர் பட்டப் பகலிலும் மது அருந்தி வருகின்றனர். இதேபோன்று இங்குள்ள நடை மேம்பாலத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஆதரவற்றவர்கள் படுத்து கிடக்கின்றனர்.
சில நேரங்களில் இந்த நடைமேடையில் மறைவான பகுதியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடமாடுகின்றனர். அதனால் இங்கு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. எனவே ரெயில் நிலையத்தில் போலீசார் அடிக்கடி ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.