உக்தவேதீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம்


உக்தவேதீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

உக்தவேதீஸ்வரர் சாமி கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருத்துருத்தி எனப்படும் குத்தாலம் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. சமயக் குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும் சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாக இந்த தலம் விளங்குகிறது.

இந்த கோவிலின் சித்திரை பெருவிழா கடந்த 24-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான 5-ம் நாள் சகோபுர திருவிழா கடந்த 29-ந் தேதி நடந்தது. 7-ம் நாள் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி 1-ந் தேதி நடந்தது.

தேரோட்டம்

இதனைதொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி, அம்பாள் பட்டாடை உடுத்தி அணிகலன்கள் அணிந்து திருத்தேர்களில் எழுந்தருளினர். பின்னர் கைலாய வாத்தியம், மேளதாளங்கள் முழங்க நான்கு ரத வீதிகள் வழியாக இரண்டு தேர்களும் வலம் வந்து நிலையை அடைந்தது.

அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுமார் 130 ஆண்டுகளுக்கு பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் உக்த வேதீஸ்வரர் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா, சகோபுர திருவிழா, திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டங்கள் உள்ளிட்டவைகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story