யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை
சேத்துப்பட்டு அருகே தனியார் பள்ளியில் படிக்கும் யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகே தனியார் பள்ளியில் படிக்கும் யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கணித ஆசிரியர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள கெங்கைசூடாமணி கிராமத்தில் சாந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் உள்ளது. இந்த பள்ளியில் 1600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
சேத்துப்பட்டு அருகே மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் தாளாளராக பள்ளியை நடத்தி வருகிறார். இவரது கணவர் காமராஜ் (வயது 49), சேத்துப்பட்டு அருகே உலகம்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பள்ளியை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.
பாலியல் தொல்லை
இந்த பள்ளியில் சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 4½ வயது மாணவி யு.கே.ஜி. வகுப்பு படித்து வருகிறாள்.
சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி, பெற்றோரிடம் உடல் முழுவதும் வலிப்பதாக அழுது உள்ளார். அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவளை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சில நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பினர்.
பள்ளிக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் அழுதுள்ளார்.
அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
கைது
அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அணி உறுப்பினர்கள் தீபிகா, அசோக் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் காமராஜ் மீது புகார் அளித்தனர்.
அதன்பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் பள்ளியில் உள்ள பணிபுரியும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் திருச்செந்தூர் சென்றிருந்த காமராஜை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியிடை நீக்கம்-போலீஸ் குவிப்பு
இந்த சம்பவத்தால் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அரசு பள்ளி கணித ஆசிரியர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.