உவர் நீரில் அதிக அளவில் வளர்ந்து வரும் மருத்துவ குணம் கொண்ட உமரி கீரை


உவர் நீரில் அதிக அளவில் வளர்ந்து வரும் மருத்துவ குணம் கொண்ட உமரி கீரை
x
தினத்தந்தி 22 July 2023 1:48 AM IST (Updated: 23 July 2023 4:55 PM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் உவர் நீரில் மருத்துவ குணம் கொண்ட உமரி கீரை அதிக அளவில் வளர்ந்து வருகிறது.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் உவர் நீரில் மருத்துவ குணம் கொண்ட உமரி கீரை அதிக அளவில் வளர்ந்து வருகிறது.

உமரிகீரை

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம் கொண்ட உமரிகீரை பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய வண்ணங்களில் அதிகளவு வளர்கிறது. அதிராம்பட்டினம், மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் வெளிவயல் ஆகிய கடற்கரையை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதியில் உவர் நீரில் வளரக்கூடிய மருத்துவகுணம் கொண்ட மூலிகை கீரையாகும்.

அதிராம்பட்டினத்தை சுற்றி கிராமங்களில் உள்ள மீனவர்களும், விவசாயிகளும் இந்த உமரிகீரையை பறித்து உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

கடந்த 60 வருடங்களுக்கு முன் அதிராம்பட்டினம் பகுதிகளில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, இந்த உமரி கீரையைத்தான் மக்கள் சமைத்து உணவாக உட்கொண்டனர். அந்தபழக்கம் தொன்றுதொட்டு இன்றும் தொடர்கிறது. சில வீடுகளில் வாரம் ஒரு முறையாவது உமரிகீரையை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

உப்புதன்மை

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சுற்றி பார்க்க வரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உமரி கீரையில் பல வண்ணங்களை பார்த்து ரசித்தும், அதைப்பறித்து அதில் உள்ள உப்பு தன்மையும் அறிந்து செல்கின்றனர்.

இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், 60 வருடங்களுக்கு முன்னால் உணவு பஞ்சம் ஏற்பட்ட போது கடற்பகுதியில் உள்ள மக்களுக்கு உணவாக பயன்பட்டது உமரிகீரை. இந்த உமரிகீரையை சாப்பிட்டால் உடம்பில் உள்ள கழிவுகளை நீக்கலாம்.

கொழுப்பை கரைக்கலாம்

உடலில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையாக வைத்து கொள்ளலாம். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கலாம். வயிற்றிலுள்ள கீரிபுச்சியை (அஸ்காரிஸ்) வெளியேற்றலாம். வாய்வு கோளாறு, செரிமான கோளாறு ஆகியவற்றை சரி செய்யலாம்.

இந்த கீரை மூலம் உமரிபுட்டு, உமரிரசம், உமரிசாம்பார் ஆகியவை தயார் செய்யலாம். மஞ்சள், பச்சை ஆகியவற்றில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளது.

சிகப்பு நிறத்தில் உள்ள உமரி கீரையில் உப்புத்தன்மை குறைவாக இருக்கும். சிவப்பு நிற உமரி கீரை வளர்வது அரிது. இது அதிக அளவில் வளராது.

தற்போது பாஸ்ட் புட் வந்த பிறகு பழைய நடைமுறையில் உள்ள உணவு பழக்க வழக்கங்கள் மறைந்து விட்டது. இதனால் உமரிக்கீரையை பயன்படுத்தி வருவோர் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது என்றனர்.


Next Story