கும்பகோணத்தில் காட்சி பொருளாக காணப்படும் நிழற்குடை


கும்பகோணத்தில் காட்சி பொருளாக காணப்படும் நிழற்குடை
x

கும்பகோணத்தில் காட்சி பொருளாக காணப்படும் நிழற்குடை

தஞ்சாவூர்

கும்பகோணம்:

நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் கும்பகோணம் மாநகரில் காட்சி பொருளாக நிழற்குடை காணப்படுகிறது. மேலும் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பயணிகள் நிழற்குடை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் பஸ்கள் நின்று செல்லும் முக்கிய நிறுத்தங்களில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை-கும்பகோணம் சாலையில் பாக்கியநாதன் தெருவில் உள்ள தாலுகா போலீஸ் நிலையம் அருகேயும் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிழற்குடை பயணிகளுக்கு எந்தவிதத்திலும் பயன்படாமல் வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி செல்லும் பஸ்களும் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கு வசதியாக இந்த நிழற்குடை முன்பு நிறுத்தப்படுவது இல்லை. அதற்கு முன்பாக தாலுகா போலீஸ் நிலையம் அருகேயே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகளும் அந்த இடத்திலேயே நின்று கொள்கின்றனர்.

வெயில்-மழை

அங்கு எந்தவித வசதியும் இல்லை. இதனால் பஸ்சிற்காக காத்திருப்பவர்கள் திறந்தவெளியில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது வெயில் அதிகமாக உள்ளதாலும், திடீரென மழை வருவதாலும் நிழற்குடையின் உள்ளே நிற்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். தற்போது 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பள்ளிகளுக்கு செல்வதற்காக பஸ்சிற்காக நிறுத்தங்களில் காத்து நிற்பார்கள்.

பயணிகள் நிழற்குடை அருகே பஸ்கள் நிறுத்தப்படாததால் இவர்களும் சாலையோரத்தில் தான் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த நிழற்குடை உள்ள பகுதியில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதுடன், இவற்றை பயன்பாட்டிற்கு கொண்ட வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருக்கைகள் இல்லை

அதேபோல் தமிழகத்திலேயே முதன்முறையாக குளிர்சாதன வசதிகள், ஏ.டி.எம். மையம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கும்பகோணத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பயணிகளுக்கான நிழற்குடை அமைக்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான நிழற்குடைகளில் குளிர்சாதன வசதிகள், ஏ.டி.எம். மையங்கள் போன்ற வசதிகள் இல்லை. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்குவீதியில் குளிர்சாதன வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது குளிர்சாதன வசதி மட்டுமின்றி இருக்கைகள் கூட இல்லை. இதனால் பஸ்சிற்காக காத்திருக்க கூடிய பயணிகள் அமர முடியாமல் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

எதிர்பார்ப்பு

கோவிலுக்கு செல்வதற்காக வருபவர்களில் பெரும்பாலானோர் இந்த நிழற்குடையில் நின்று தான் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த நிழற்குடையில் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் கும்பகோணம் மாநகரில் பயன்படாமல் காட்சி பொருளாக உள்ள நிழற்குடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.


Next Story