இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்


இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்
x

இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51-வது கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து உள்ளிட்ட 10 உறுப்பினர் நாடுகளும், உறுப்பினர் அல்லாத 16 நாடுகளும் இணைந்து வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இலங்கையில் சமாதானம், மனித உரிமைகள், பொறுப்புடைமை ஆகியவற்றை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானத்தில் மொத்தம் 19 அம்சங்கள் இடங்கள் பெற்றுள்ளன.

அதில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளில் உரிய அதிகார வரம்பு கொண்ட அமைப்பால் நீதித்துறை விசாரணை மற்றும் பிற நடைமுறைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு விரும்பினால் இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவிலேயே கூட நடத்த முடியும். இத்தகைய சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையில் குரல் கொடுத்த இந்தியா, ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story