கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை


கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை
x

காட்பாடியில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

கூலி தொழிலாளி

வேலூர் மாவட்டம் காட்பாடி பிள்ளையார் கோவில் ஏரிமுனை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி இளவரசி (31). இவர்களுக்கு தனுஷ் (11), சிவகார்த்திக் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ரஞ்சித்குமார் கடந்த 14-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் காட்பாடி ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் இளவரசி மன வேதனையுடன் காணப்பட்டார். மனவேதனையில் அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

கிணற்றில் குதித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு எழுந்து பார்த்த போது இளவரசியை காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இளவரசியை இரவு முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் இளவரசி பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளவரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த தூக்கம் தாளாமல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் காட்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story