பறக்க முடியாமல் தவித்தஅரியவகை கழுகு


பறக்க முடியாமல் தவித்தஅரியவகை கழுகு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே பறக்க முடியாமல் தவித்த அரியவகை கழுகை வனத்துறையினர் மீட்டனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர் சங்கரன்குடியிருப்பு விலக்கு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் நேற்று பெரிய பறவை ஒன்று பறக்க முடியாமல் நின்றது. அதனை ஜெயமுருகன் உள்ளிட்டவர்கள் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர், வனத்திருப்பதி வன ரேஞ்சர் கனிமொழி, வனகாவலர் அபிஷேக், சாத்தான்குளம் கால்நடை உதவி மருத்துவர் சவுந்தர் உள்ளிட்டவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்ேபாது, அந்த பெரிய பறவை மலைப்பகுதியில் சுற்றி திரியும் அரிய வகை கழுகு என்பதும், பாதை மாறி இப்பகுதியில் வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர், கழுகுக்கு உணவு கொடுத்து, தண்ணீர் குடிக்க வைத்தனர். பின்னர் கழுகை பரிசோதனை செய்த டாக்டர், அவற்றுக்கு எந்தவித காயங்களும் இல்லையென தெரிவித்தார். வனத்துறையினர் அந்த அரியவகை கழுகை மீட்டு கூண்டில் அடைத்து நெல்லை மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் கழுகை வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.


Next Story