ஆந்திர மாநில பயணியிடம் கணக்கில் வராத ரூ.47¼ லட்சம் பறிமுதல்
மும்பையில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த ஆந்திர மாநில பயணியிடம் கணக்கில் வராத ரூ.47¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் சோதனை
தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட போலீஸ் டி.ஜி.பி. உத்திரவிட்டிருந்தார்.
அதன்படி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி அகிய ரெயில் நிலையங்கள் வழியாக வந்து செல்லும் ரெயில்களிலும், ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.47¼ லட்சம் பறிமுதல்
இந்தநிலையில் நேற்று மதியம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை செய்தனர்.
அப்போது பொது பெட்டியில் சோதனை செய்த போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஜீலான் (வயது 45) என்பவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது பணத்திற்கு சரியான கணக்கு இல்லை.
அதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து சரிபார்த்த போது அதில் ரூ.47 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை சென்னை வருமான வரி அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது