அனுமதியின்றி சரள் மண் கடத்தல்:2 லாரிகள்-பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ஓட்டப்பிடாரம் அருகே அனுமதியின்றி சரள் மண் கடத்திய பின்னணியில் 2 லாரிகள்-பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே சில்லாநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காட்டுப் பகுதியில் அனுமதியின்றி சரள் மண்ணை தோண்டி எடுத்து கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து மாவட்ட புவியியல் உதவி இயக்குனர் சுஜிதா ரஹிமா தலைமையில் ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் இசக்கிமுருகேஸ்வரி மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகளை பார்த்தவுடன் சரள் மண்ணை அள்ளிக் கொண்டிருந்தவர்கள் வாகனங்களை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில், சில்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த பொங்குராஜா என்பவர் தலைமையில் உரிய அனுமதியின்றி சரள் மண்ணை அள்ளி லாரிகளில் கடத்தி வருவது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்த 2 லாரிகள் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை புதியம்புத்தூர் போலீசாரிடம் வருவாய் துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.