சுகாதாரமற்ற பகுதியில் இயங்கும் இறைச்சிக் கடை


சுகாதாரமற்ற பகுதியில் இயங்கும் இறைச்சிக் கடை
x

சுகாதாரமற்ற பகுதியில் இயங்கும் இறைச்சிக் கடை

திருப்பூர்

தளி

உடலின் இயக்கம் தொய்வின்றி நடைபெறுவதற்கு தேவையான சத்துக்களை அளிப்பதில் உணவின் பங்கு முக்கியமானதாகும். தானியங்கள், கீரைகள், காய்கறிகள், அரிசி வகைகள், கிழங்குகள், பழங்கள், மூலிகைகள் உள்ளிட்ட ஏராளமான சைவ வகைகளும் ஆடு, மாடு, கோழி, காடை, கவுதாரி, மீன், புறா, வான்கோழி உள்ளிட்ட அசைவ வகைகளும் உணவு பட்டியலில் போட்டி போட்டுக் கொண்டு உயிர் வாழ்வதற்கு ஏற்ற ஆற்றல்களை அள்ளிக் கொடுக்கிறது.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் உணவே மருந்து என்று கூறக்கூடிய சைவ உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பழக்கமே அனைத்து இல்லங்களிலும் இருந்து வருகிறது.இதற்கு காரணம் உணவகங்களில் வெவ்வேறான பெயர்களில் கண்ணை கவரும் கலரில் விதவிதமான சுவைகளில் அடுக்கடுக்காக தட்டத்தில் வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து வெங்காயம் கொத்தமல்லி, தூவி பரிமாறப்படும் அசைவ உணவின் சுவைக்கும் மனதும் நாவும் அடிமையாய் விடுகிறது.

ஒருமுறை அசைவைத்தை சுவைத்த நாக்கு மீண்டும் மீண்டும் அதே சுவையை தேடி மனதையும் உடலையும் இழுத்துச் சென்று விடுகிறது.இதனால் சைவ உணவகங்களை விடவும் அசைவ உணவகங்களே புற்றீசல் போல் ஆங்காங்கே அதிக அளவில் முளைத்து உள்ளது.அந்த வகையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை பொதுமக்க தேடிச்சென்று தங்களுக்கு தேவையான இறைச்சியை குறிப்பிட்ட இடைவெளியில் வாங்கிச் சென்று சுவைத்து மகிழ்கின்றனர்.

ஆனால் அந்த கடைகள் சுகாதாரமான பகுதியில் இயங்குகிறதா என்றால் இல்லை என்றே பதில் வரும். அத்துடன் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இறைச்சியும் ஒரு சில பகுதிகளில் தரமற்றதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதை உணர்த்தும் விதமாக உடுமலை- அமராவதி சாலையில் குறிச்சி கோட்டைக்கு அருகே சுடுகாட்டுக்கு அருகில் பொதுமக்கள் இயற்கை உபாதைகள் கழிக்கும் பகுதியில் இறைச்சி கடை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. சுகாதாரமற்ற சூழலில் உருவாக்கப்படும் இறைச்சியை பொதுமக்கள் வாங்கிச் சென்று பயன்படுத்துவதால் தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

அது முறையாக அனுமதி வாங்கி வைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. வியாபார நோக்கோடு செயல்படும் ஒரு சிலரால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் கிராமம் மற்றும் நகர்புறங்களில் ஆய்வுக்கு வருகின்றனரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் முறைப்படி ஆய்வு மேற்கொண்டால் இது போன்ற தவறுகளை தடுத்து பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதற்கு ஏதுவாக இருக்கும்.

எனவே குறிச்சிக்கோட்டையில் சுகாதாரமற்ற பகுதியில் பொதுமக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இயங்கி வரும் இறைச்சிக் கடையை அப்புறப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நகரம் கிராமம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் தரமான இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.



Related Tags :
Next Story