தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.516 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ்  ரூ.516 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.516 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.515.72 கோடி செலவில் 363 கிராம மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கூட்டு குடிநீர் திட்டம்

தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் 2 கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 136 பஞ்சாயத்துகளை சேர்ந்த 363 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தபடுகிறது.

363 கிராமங்கள்

தற்போது இந்த 363 கிராமங்களுக்கும் ஏற்கனவே உள்ள 6 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 6.69 எம்.எல்.டி குடிநீரும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 2.97 எம்.எல்.டி குடிநீரும் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இது போதுமானதாக இல்லை என்பதால் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அகரம் கிராமம் அருகே நீர் உறிஞ்சு கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேசன் அமைத்து 16.57 எம்.எல்.டி தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், சேதுராமலிங்கபுரத்தில் 16.57 எம்.எல்.டி திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 363 கிராமங்களில் உள்ள 3.05 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் புதிதாக 92 ஆயிரத்து 407 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.515.72 கோடியாகும். இதில் தமிழக அரசின் பங்களிப்பு ரூ.236.545 கோடி, மத்திய அரசின் பங்களிப்பு ரூ.236.545 கோடி, மக்கள் பங்களிப்பு ரூ.7.37 கோடி என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story