'நம்ம ஊரு சூப்பரு' பிரசாரத்தின் கீழ் பூங்காக்கள், நீர்நிலைகள் சுத்தம் செய்யும் பணிகள் நாளை தொடக்கம்: ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் தகவல்


நம்ம ஊரு சூப்பரு பிரசாரத்தின் கீழ்  பூங்காக்கள், நீர்நிலைகள் சுத்தம் செய்யும் பணிகள் நாளை தொடக்கம்:  ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x

தேனி மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு பிரசாரத்தின் கீழ் பூங்காக்கள், நீர்நிலைகள் சுத்தம் செய்யும் பணிகள் நாளை தொடங்குவதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

தேனி

கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் செய்யும் வகையில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற பெயரில் சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடக்க உள்ளது. இந்த பிரசார பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கிராம பகுதிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பிரசாரத்தை சிறப்பாக நடத்துவதற்கு பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி வரை ஊரக பகுதிகளில் பூங்காக்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story