மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 94½ லட்சம் பொதுமக்கள் பயன்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இதுவரை 94½ லட்சம் பொதுமக்கள் பயன்பெற்று உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
அந்தியூர்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இதுவரை 94½ லட்சம் பொதுமக்கள் பயன்பெற்று உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாமரைக்கரையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் பர்கூர் மலைப்பகுதியில் புதிய நடமாடும் மருத்துவக்குழு சேவை, புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு புதிய தாய் சேய் நல ஊர்தி சேவை மற்றும் புதிய அமரர் ஊர்தி சேவை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி. அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தனர்.
85 திட்டங்கள்
பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில் கூறியதாவது:-
மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 85 திட்டங்கள் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-
94½ லட்சம்
அந்தியூர் சுற்றுவட்டார மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை உள்பட சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 94 லட்சத்து 40 ஆயிரத்து 726 மக்கள் பயன்பெற்றுள்ளனர். விரைவில் 1 கோடி என்ற மகத்தான சாதனையை புரியவுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மலை கிராமங்களில் காணொளி வாயிலாக நோய் கண்டறிந்து அதற்கான மருந்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரத்த சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் நவீன உபகரணங்கள், கோபி அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பச்சிளங்குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக, ஒலி புகா அறை மற்றும் நவீன உபகரணங்கள், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய சி.டி.ஸ்கேன் கருவிகள், பவானி அரசு மருத்துவமனையில் ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கான நவீன உபகரணங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பர்கூர் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள, நோயாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3 நோயாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய பெட்டகத்தினை வழங்கினார்.
இதேபோல் அந்தியூர் அரசு மருத்துவமனையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
மாலை அணிவிப்பு
முன்னதாக, அமைச்சர் சு.முத்துசாமி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் நவமணி கந்தசாமி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம், இணை இயக்குனர்கள் டாக்டர் ஜெ.நிர்மல்சன், டாக்டர் வினய், ஈரோடு டாக்டர் பிரேமகுமாரி, துணை இயக்குனர்கள் டாக்டர் எஸ்.சவுண்டம்மாள், டாக்டர் கனகராஜ், டாக்டர் ரவீந்திரன், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மணி, பர்கூர் ஊராட்சி தலைவர் ஓ.மலையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.