திறப்பு விழாவுக்கு தயாராகும் 'கீழடி அகழ் வைப்பகம்'
திறப்பு விழாவுக்கு ‘கீழடி அகழ் வைப்பகம்’ தயாராகி உள்ளது. அங்கு பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருப்புவனம்
திறப்பு விழாவுக்கு 'கீழடி அகழ் வைப்பகம்' தயாராகி உள்ளது. அங்கு பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அகழ் வைப்பகம்
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வுகள் நடந்து, பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் பல்வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு விரைவில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே கிடைத்த அகழாய்வு பொருட்களை கீழடியிலேயே காட்சிப்படுத்தி, அதை சிறந்த சுற்றுலா தலமாகவும் மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே ெகாந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தமிழக அரசால் அகழ் வைப்பகம் கட்டப்பட்டது. செட்டிநாடு பாரம்பரிய கட்டிடக்கலையில் இது கட்டப்பட்டு உள்ளது.
பல்வேறு வசதிகள்
அதில் ஒவ்வொரு கட்ட அகழாய்வு பொருட்களையும் தனித்தனியாக காட்சிப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பார்வையாளர்கள் அமருவதற்கான ஓட்டுக்கூரையுடன் குடில்கள், பூங்கா, சிறிய தெப்பக்குளம், கல் மண்டபம் உள்ளிட்டவை பழங்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் இந்த அகழ் வைப்பகத்தில் நம்மை பழங்காலத்துக்கே அழைத்துச் செல்லும் அனுபவத்தை கொடுக்கும் வகையிலான மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளன.
தேக்கு மர தூண்கள், ஒவ்வொரு கட்டிடத்துக்கும் பெரிய பெரிய முற்றம், திண்ணைகள், வேலைபாட்டுடன் கூடிய ஜன்னல்கள் என பார்வையாளர்களை கவர ஒவ்வொரு பகுதியையும் நுட்பமாக வடிவமைத்து இருக்கிறார்கள்.
இதற்கான பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. தற்போது அகழாய்வு பொருட்களை அங்கு காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் இந்த அகழ் வைப்பகம் திறப்பு விழா காணும் என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் அகழ் வைப்பக பணிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து அறிந்து கொள்கின்ற வகையில் அகழ் வைப்பகம் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்ததை அகழாய்வுகள் மூலம் கிடைத்த ஏராளமான தொல் பொருட்கள் உறுதிப்படுத்துகின்றன. அந்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு செட்டிநாடு கலைநயத்துடன் கூடிய அகழ் வைப்பக பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அகழ் வைப்பக பொருட்களை காட்சிப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் வகுப்பறைகள்
பின்பு திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட இடம் தேர்வு பணிகள் தொடர்பாகவும், வைகை வடகரை பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி கட்டிட மைய பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிகண்டன், அகழாய்வு இணை இயக்குனர் ரமேஷ், திருப்புவனம் யூனியன் தலைவர் சின்னையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.