தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்


தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
x
தினத்தந்தி 18 Jun 2023 2:30 AM IST (Updated: 18 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப்பெரியாற்றில் கலப்பதால் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தேனி

தேனி அருகே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப்பெரியாற்றில் கலப்பதால் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை

தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 25 ஆயிரம் குடியிருப்புகளில் இருந்தும், நூற்றுக்கணக்கான வணிக கட்டிடங்களில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் பங்களாமேட்டில் அரசு மாணவர் விடுதி அருகில் உள்ள கழிவுநீரேற்றும் நிலையத்துக்கு வருகிறது. அங்கிருந்து கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ராட்சத குழாய் மூலம் கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு கழிவுநீர், தாமரைக்குளம் கண்மாயில் நிரப்பப்படுகிறது. கண்மாயில் இருந்து விவசாயிகள் சிலர் விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதிக அளவில் கழிவுநீர் வெளியேறுவதால் கண்மாய் நிரம்பி மறுகால் வழியாக வெளியேறுகிறது.

ஆற்றில் கலக்கிறது

இவ்வாறு வெளியேறும் கழிவுநீர் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் விவசாய நிலத்தில் உள்ள வாய்க்கால் வழியாக சென்று கோட்டைப்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக சுத்திகரிப்பு செய்து, தண்ணீரை ஆய்வு செய்து அதன்பிறகே வெளியேற்ற வேண்டும். ஆனால், முறையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சில ஆண்டுகளாகவே தாமரைக்குளம் கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளிப்பதோடு, அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. அதுபோல் மறுகால் பாயும் பகுதியில் நுரை பொங்கி காணப்படுகிறது. முல்லைப்பெரியாற்றில் கழிவுநீர் கலக்கும் இடத்திலும் நுரை பொங்கி காட்சி அளிக்கிறது.

மக்கள் அச்சம்

கோட்டைப்பட்டியில் கழிவுநீர் கலக்கும் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் குன்னூரில் ஏராளமான குடிநீர் திட்டங்கள், ஆற்றில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு உறைகிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசுபடவும், அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்களிடம் நீண்ட காலமாகவே அச்சம் நிலவி வருகிறது.

எனவே, பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதை முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதோடு, சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் தண்ணீர் முல்லைப்பெரியாற்றில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story