சென்னையில் இருந்து மியான்மருக்கு கடலுக்கு அடியில் பைபர் கேபிள் இணைக்கும் பணி தொடங்கியது
சென்னையில் இருந்து மியான்மருக்கு கடலுக்கு அடியில் பைபர் கேபிள் இணைக்கும் பணி தொடங்கியது. இதன் மூலம் செயற்கைகோள் உதவியின்றி அதிவேக இணைய வசதி பெறலாம்.
சென்னை,
ஆசிய நாடுகளுடன் தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக இந்தியா கைகோர்த்து இருக்கிறது. இதன் முக்கிய நடவடிக்கையாக மும்பையில் இருந்து சிங்கப்பூர் வரை கடல் வழியாக பைபர் கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக 2019-ம் ஆண்டு முதலே பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதிக்கும் பணியை மேற்கொண்டு வந்தன. தற்போது மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மும்பையில் இருந்து கடல் வழியாக கேபிள் பதிக்கும் பணியை தொடங்கி நடத்தி வருகிறது. தற்போது மும்பையில் இருந்து கேபிளை எடுத்து வந்த தொழில்நுட்ப கப்பல் நேற்று சென்னைக்கு வந்தது.
செயற்கைகோள் உதவியின்றி...
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அலுவலகத்தில் இந்த கேபிள் இணைக்கும் பணி நடந்தது. கடல் வழியாக கொண்டு வரப்பட்ட இந்த கேபிள், கடற்கரையில் இருந்து நிலத்தின் வழியாக அந்த அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த ராட்சத எந்திரங்கள் கொண்டு கடலுக்கு அடியில் பைபர் கேபிளை சிங்கப்பூர் வரை கொண்டு செல்லும் பணிகள் நடைபெற இருக்கின்றன. மொத்தம் 8,100 கி.மீ. தூரம் இந்த கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை, சென்னை, மியான்மர், தாய்லாந்து, மலேசியா கடந்து இந்த கேபிள் சிங்கப்பூருக்கு எடுத்து செல்லப்படுகின்றன.
இந்த பைபர் கேபிள் மூலமாக அதிவேக டேட்டா சேவை பெறமுடியும். செயற்கைக்கோள்கள் உதவியின்றி தொலைத்தொடர்பு சேவைகளை இதன் மூலம் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
மியான்மர் நோக்கி
ஏற்கனவே அனைத்து விதமான தடையில்லா சான்றிதழ்கள் மற்றும் அனுமதி பெற்ற நிலையில் 2019-ம் ஆண்டில் இருந்து கடலுக்கு அடியில் பைபர் கேபிள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அதன்படி, இந்தியா - ஆசிய நாடுகளுடன் டேட்டா பரிமாற்றத்துக்காக மும்பை - சிங்கப்பூர் இடையே கடல் வழியாக ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக அதிவேக டேட்டா சேவையை பெறலாம். செயற்கைக்கோளின் உதவி இல்லாமலேயே அதிவிரைவான இணைய வசதியை பெறலாம். தற்போது மும்பை கடந்து சென்னைக்கு வந்து, இங்கிருந்து மியான்மர் நோக்கி கடல் வழி பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.