வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 28-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 28-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயதில் உச்சவரம்பு ஏதுமில்லை. பதிவுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது. பொதுப்பிரிவினருக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதிருந்தால் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.300-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்றிருந்தால் ரூ.600-ம், 3 மாதங்களுக்கு ஒருமுறை என வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு, எழுதப்படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.1000-ம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு, தற்போது ஒவ்வொரு மாதமும் தொடர்புடையவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

விண்ணப்பம்

ஏற்கெனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள். மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில்பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு இவ்வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்க இயலாது. விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தை 2-வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-609001 என்ற முகவரியில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவசமாக பெற்றோ அல்லது https://employmentexchange.tn.gov.in/download.html என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 28.-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story