வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 ஆண்டுகள் நிறைவு
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பலர் பதிவு செய்துள்ளனர். தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பட்டப்படிப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டயப்படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதியாண்டில் தேர்ச்சி அடையாதவர்கள் என்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்பு காலாண்டிற்கு உதவித்தொகை பெற விண்ணப்ப படிவங்களை வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அல்லது www.tnvelaivaaippu.gov.in அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ், அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை நேரில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவு அடையாள அட்டை புதுப்பித்தல்
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்கள் வருவாய்த்துறையினர் சான்றிதழ்களுடன் உதவித்தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து பணியில் இல்லை என்று சுயஉறுதி மொழி படிவத்தை அளிக்க வேண்டும். அதனுடன் தற்போது வரை புதுப்பித்தல் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் முந்தைய ஆண்டு பெற்ற உதவித்தொகை பரிவர்த்தனையின் பக்கங்கள், போட்டா ஆகியவை இணைக்கப்பட்டு நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்க தவறினால் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்.
உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்களது வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பித்து, அதனை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இதனை புதுப்பிக்க தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்து செய்யப்படாது.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.