இயற்கை வேளாண்மை மூலம் மலடான நிலத்தையும் மீட்கலாம்


இயற்கை வேளாண்மை மூலம் மலடான நிலத்தையும் மீட்கலாம்
x

இயற்கை வேளாண்மை மூலம் மலடான நிலத்தையும் மீட்கலாம்

திருப்பூர்

போடிப்பட்டி,

ரசாயன உரங்களின் தாக்கத்தால் மலடான நிலங்களையும் இயற்கை வேளாண்மை மூலம் மீட்டெடுக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நஞ்சில்லா வேளாண்முறை

பருவநிலை மாற்றங்கள், இயற்கை சீர்கேடுகள், பரவி வரும் உயிர்க்கொல்லி நோய்கள் போன்றவை பொதுமக்களை இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவு நோக்கித் திருப்பியுள்ளது. இதனால் இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக ரசாயன உரங்கள் பயன்படுத்தி மண் மலடான நிலையில் அதனை மீட்டெடுக்க முடியுமா என்பது விவசாயிகளின் சந்தேகமாக உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-

தானியப் பயிர்களான சோளம், கம்பு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு வாசனைப் பயிர்களான கொத்தமல்லி, கடுகு, சோம்பு, வெந்தயம் பயறு வகைப் பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, கொள்ளு, தட்டைப்பயறு, துவரை எண்ணெய் வித்துப் பயிர்களான எள், ஆமணக்கு, சூரியகாந்தி, சோயா, தழைச்சத்துப் பயிர்களான சணப்பை, தக்கைப் பூண்டு, கொழிஞ்சி, அகத்தி, சித்தகத்தி ஆகியவற்றில் நமக்குக் கிடைக்கின்ற விதைகளைக் கலந்து ஒரே நேரத்தில் விதைக்க வேண்டும்.பின்னர் பூப் பூத்தவுடன் மடக்கி உழவு செய்ய வேண்டும்.இதனால் அவை அனைத்தும் நிலத்துக்கு உரமாக மாறி மண்வளம் மேம்படுவதோடு, பயிர்களுக்குக் கிடைக்க வேண்டிய நுண்ணூட்டச் சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்க வழி செய்வதுடன் நன்மை செய்யும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து மகசூல் உயர்வுக்கு வழிவகுக்கும். பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, பாசன நீரின் தன்மை மற்றும் இருப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப பயிர் சுழற்சியை மேற்கொள்ளலாம்.

இயற்கை பூச்சி விரட்டி

கலப்புப் பயிர், ஊடுபயிர் சாகுபடியின் மூலம் களைச் செடிகளை இயற்கையாக கட்டுப்படுத்தலாம்.மேலும் பிரதான பயிரில் பூச்சிகளின் தாக்குதலும் இதனால் குறைகிறது.ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது தீமை செய்யும் பூச்சிகள் மட்டுமல்லாமல் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகிறது. ஆனால் இயற்கை பூச்சி விரட்டிகள் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் விரட்டும் தன்மை கொண்டது.மேலும் இயற்கை உரங்களான மண்புழு உரம், சாண எரு உரம், தொழு உரம், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.அத்துடன் தேமோர்க்கரைசல், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை பயன்படுத்தி மண் வளத்தையும் நுண்ணுயிர் பெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.நஞ்சில்லாத உணவைப் பெற இயற்கை விவசாயம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story