நிரம்பாத வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம்


நிரம்பாத வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம்
x

போதிய மழை பெய்யாததால் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்

திருநெல்வேலி

இட்டமொழி:

போதிய மழை பெய்யாததால் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பெரியகுளம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் வடக்கு விஜயநாராயணத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளம் மேற்கே ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் முதல் கிழக்கே குட்டத்தட்டிபாறை வரைக்கும் சுமார் 7 கிலோமீட்டர் சுற்றளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை மூலமும், நம்பியாற்றில் இருந்து வரும் தண்ணீர், மணிமுத்தாறு கால்வாயில் வரும் தண்ணீர் மூலமும் குளம் நிரம்பி விடும். இந்த குளம் ஒரு தடவை நிரம்பினால் கீழ்ப்பகுதியில் உள்ள இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, அழகப்பபுரம், சுவிசேஷபுரம் மற்றும் சாத்தான்குளம், ராதாபுரம் பகுதிகளில் உள்ள கிணறுகள், இடைச்சிவிளை தேரி பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவிடும்.

மழை இல்லை

கடந்த ஆண்டு பெரியகுளம் முழுவதுமாக நிரம்பியதால் விவசாயம் சிறப்பாக நடைபெற்றது.

ஆனால் இந்த ஆண்டு இதுவரைக்கும் போதிய மழை பெய்யவில்லை. இதனால் குளத்தின் பெரும்பாலான பகுதி வறண்டும், அதே நேரத்தில் ஒரு சில பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கியும் கிடக்கிறது. மேலும் நம்பியாற்று கால்வாய்களிலும் நீர் வராததால் தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது.

தற்போது விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை குளத்தின் உட்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு உள்ளனர். மேலும் விவசாயிகள் குளத்து நீரை நம்பி நாற்றுப் பாவியுள்ளனர். ஒரு சிலர் நெல் நடுவைப்பணிகளை தொடங்கி விட்டனர். சிலர் மழை பெய்யாததால் நாற்றுக்களை நடாமல் அப்படியே விட்டுள்ளனர்.

விவசாயிகள் கவலை

இன்னும் சில நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால் இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

அதேநேரத்தில் மழையை எதிர்பார்த்தும் காத்திருக்கிறார்கள்.


Next Story