நெல்லையில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் - மாநகராட்சி மேயர்


நெல்லையில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் - மாநகராட்சி மேயர்
x

நெல்லை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேட்டையில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் மேயர் சரவணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

பேட்டை:

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நெல்லை மண்டலம் 16-வது வார்டுக்கு உட்பட்ட பழையபேட்டை பகுதியில் பகுதி சபா கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை எம்பி. ஞானதிரவியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் பேசியதாவது:-

நெல்லை மாநகராட்சி முழுவதும் தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம், பாதாள சாக்கடை திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம், சாலை பாதுகாப்பு மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மக்களை தேடி மேயர் என்ற சிறப்பு முகாமும் மாநகராட்சி மூலம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்கு சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சி தினமாக அறிவித்ததை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் மறுவரையறை செய்யப்பட்டு 226 பகுதி சபாக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 226 நபர்களை சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கான வார்டு கமிட்டி உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெறும். பொதுமக்கள் இக்கூட்டங்களில் தவறாது கலந்துகொண்டு தேவைகளை நிறைவேற்றி பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கூட்டத்தில் பாதாள சாக்கடையை சரி செய்தல், தார்சாலை வசதி, கழிப்பிட வசதி, முதியோர் உதவித்தொகை, தண்னீர் மற்றும் மின்விளக்குகள் வசதி, கிருஷ்ணபேரியில் அமைந்துள்ள வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து தர கேட்டும் மொத்தம் சுமார் 19 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story