ஒன்றியக்குழு கூட்டம்
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
சுப்பிரமணியன்(தி.மு.க.):- கஞ்சாநகரம் கிராமத்தில் கல்வெட்டை சீரமைக்க வேண்டும். மங்கனூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வடிகால் வசதி, சாலை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
பழுதடைந்த பாலம்
தேவிகா (தி.மு.க.):- இலுப்பூர் ஊராட்சி வடக்குத்தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்து உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் பாலம் உடைந்து விடுமோ? என்று அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்.
ராணி(தி.மு.க.):- திருச்சம்பள்ளி வண்ணாங்குளம் படித்துறையை சீரமைக்க வேண்டும். முடிகண்டநல்லூரில் அங்கன்வாடி அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.
பழமையான கட்டிடங்கள்
அதனைத்தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக செய்து கொடுக்கப்படும். மேலும், தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்