ஒடிசா ரெயில் விபத்து குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் -உதயநிதி ஸ்டாலின்


ஒடிசா ரெயில் விபத்து குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் -உதயநிதி ஸ்டாலின்
x

ஒடிசா ரெயில் விபத்து குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மீனம்பாக்கம்,

ஓடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை துரிதமாக ஏற்படுத்தி கொடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், அரசு அதிகாரிகள், ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு 3-ந் தேதி ஒடிசா சென்றது.

அங்கு ரெயில் விபத்தில் சிக்கிய பெருமளவிலான தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. சிலர் விமானத்திலும், மற்றவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலமும் சென்னை வந்தனர்.

இந்தநிலையில் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் தனி விமானத்தில் சென்னை திரும்பினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழர்கள் பாதிக்கவில்லை

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து துயரமான சம்பவம். அதில் தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. உடனே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை முதல்-அமைச்சர் அனுப்பி ஆய்வு செய்து உதவிட உத்தரவிட்டார்.

சம்பவம் நடந்த இடம், பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்தோம். அங்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பலியானவர்கள் உடல்கள் வைக்கப்பட்டு இருந்த சவக்கிடங்கிற்கு சென்று பார்த்தபோது அங்கும் தமிழர்கள் உடல்கள் இல்லை. அந்த மாநில அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினோம். அப்போது தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்கள். பின்னர் முதல்-அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை செய்த போது பயணிகள் பட்டியலில் 127 பேரில் 28 பேர் தமிழர்கள் என்று சொன்னார்கள்.

அரசு அதிகாரிகள் தங்கி உள்ளனர்

ஒடிசா அரசு சிறப்பு மையம் அமைத்து உள்ளது. அங்கும் விசாரித்த போது தமிழர்களை காணவில்லை. 8 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. தற்போது அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். எங்கள் குழுவுடன் வந்த அரசு அதிகாரிகள் அங்கு தங்கி உள்ளனர்.

இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம். எதனால் இந்த விபத்து ஏற்பட்டது? என்பதை மத்திய அரசு கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்க கூடாது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது. சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். ஒடிசா அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஒடிசா அரசு சிறப்பாக செயல்பட்டது. ஒடிசாவில் உள்ள கள நிலவரம் எல்லோருக்கும் தெரியும். தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

பொறுப்பேற்க வேண்டும்

ஒடிசா அரசுதான் விபத்து நடந்த இடத்தில் இருந்து புவனேஸ்வர் வரை பஸ்களில் அழைத்து சென்றது. சம்பவ இடத்துக்கு செல்வதற்கு மதியம் ஆகிவிட்டது.

விபத்து பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் உள்பட அனைவருக்கும் பாராட்டுக்கள். ஒடிசா அரசு எந்தவித உதவியும் கேட்கவில்லை. உதவிகள் தேவைப்பட்டால் தமிழக அரசு செய்ய தயாராக உள்ளது.

இந்த விபத்துக்கு யாராவது பொறுப்பு ஏற்க வேண்டும். என்ன நடவடிக்கை? யார் மீது நடவடிக்கை? என்பதை பார்த்து கட்சி தலைவர் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story