பிரதமரின் முயற்சியால் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது நாமக்கல்லில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேச்சு


பிரதமரின் முயற்சியால் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது  நாமக்கல்லில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேச்சு
x

பிரதமரின் முயற்சியால் இந்தியா வேகமாகவும், துடிப்புடனும் முன்னேறி வருவதாக நாமக்கல்லில் அமிர்த பெருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.

நாமக்கல்

அமிர்த பெருவிழா

இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகம் மூலம் இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்த பெருவிழா நாமக்கல்லில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப்படங்கள், பல்வேறு அரசுத்துறைகளின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்கப்படங்களை அவர் பார்வையிட்டார். முன்னதாக கண்காட்சி அரங்கின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் சிலைக்கு இணை மந்திரி முருகன் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இணை மந்திரி

அதன்பிறகு இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்த பெருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.கே.பி. சின்ராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா முன்னிலை வகித்தார். மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வரவேற்று பேசினார். அதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் என்ற நூலை எல்.முருகன் வெளியிட்டார். மேலும் அமிர்த பெருவிழா ஓவியப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு மத்திய இணை மந்திரி முருகன் பரிசுகளை வழங்கினார். அதேபோல் தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகளும் வழங்கப்பட்டன.

துடிப்புடன் முன்னேறுகிறது

நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி முருகன் பேசியதாவது:-

வருகிற 2047-ம் ஆண்டு இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அப்போது உலக நாடுகளுக்கு முன்னோடி நாடாக இந்தியா திகழ வேண்டும். அதற்காக வரும் 25 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு இந்தியனும் உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டிற்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது?. கடந்த 8 ஆண்டில் நாடு எவ்வளவு முன்னேறி உள்ளது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் 6 ஆண்டில் நமது நாடு தூய்மை இந்தியாவாகி உள்ளது. மேலும் 200 கோடிக்கு மேலான கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசால் இலவசமாக கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பிரதமர் மோடி தற்சார்பு இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பிரதமரின் முயற்சியால் இந்திய நாடு வேகமாகவும், துடிப்புடனும் முன்னேறி வருகிறது.

இவ்வாறு மத்திய மந்திரி முருகன் பேசினார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், சென்னை மத்திய மக்கள் தொடர்பக இயக்குனர் காமராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, துணைத்தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர்கள் வடிவேல், சத்யபானு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நகர தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story