மீனவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய மந்திரிகள்
தொண்டியில் மீனவர்களிடம் கோரிக்கைகளை மத்திய மந்திரிகள் கேட்டறிந்தனர்.
தொண்டி,
கலந்துரையாடல்
தொண்டியில் உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை வளாகத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் சார்பில் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மீனவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தமன் ரூபாலா, மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தனர்.
பின்னர் மீனவர்களுடன் கலந்துரையாடிய மந்திரிகளிடம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அப்போது தொண்டியை சேர்ந்த மீனவர்கள் தொண்டியில் உள்ள ஆற்று முகத்துவாரத்தை ஆழப்படுத்தி அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தந்தால் புயல், மழை காலங்களில் படகுகள் சேதமாகாமல் பாதுகாப்பான முறையில் நிறுத்துவதற்கு வசதியாக இருக்கும் என்றும் இதற்கு உடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பல்வேறு கோரிக்கைகள்
பெண்களுக்கு வங்கி கடன் உதவி, மீனவர் கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும், தொண்டியில் மீன்வளத்துறை சார்பில் பயன்படாமல் உள்ள ஐஸ் பிளான்ட் மீண்டும் செயல்படுத்த வேண்டும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது கடலில் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய நிவாரண தொகை கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது என்றும் அதனை உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர் கடற்கரையில் மீன்பிடி படகுகள் மற்றும் கடற்கரையை நேரில் பார்வையிட்டு மத்திய மந்திரிகள் ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோபிநாத், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.