பராமரிக்கப்படாத தமிழக-கேரள இணைப்புச் சாலை:குண்டும், குழியுமாக மாறிய போடிமெட்டு மலைப்பாதை:வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்


பராமரிக்கப்படாத தமிழக-கேரள இணைப்புச் சாலை:குண்டும், குழியுமாக மாறிய போடிமெட்டு மலைப்பாதை:வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள மாநில இணைப்புச் சாலையான போடிமெட்டு மலைப்பாதை பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள்

தேனி

போடிமெட்டு மலைப்பாதை

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்கு போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை என 3 மலைப்பாதைகள் உள்ளன. இதில் போடியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடிமெட்டுக்கு செல்லும் சாலை போடிமெட்டு மலைப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் முந்தலில் இருந்து போடிமெட்டு வரை சுமார் 19 கிலோ மீட்டர் முழுவதும் மலைப்பாதையாகும். இதில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

போடிமெட்டு வழியாக மூணாறு, கொச்சி பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, மூணாறு, பூப்பாறை போன்ற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் சென்று வரும் சாலையாகவும் இது திகழ்கிறது. ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் செல்வதற்காகவே இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான ஜீப்கள் இயக்கப்படுகின்றன.

கொண்டை ஊசி வளைவுகள்

இந்த சாலை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், அடிவாரத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே பராமரிப்பு செய்வதோடு சரி. பாதி தூரம் கடந்தால் ஆபத்து நிறைந்ததாக சாலை மாறியுள்ளது. குறிப்பாக 11 முதல் 17 வரையிலான கொண்டை ஊசி வளைவுகளில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

ஏற்கனவே இந்த கொண்டை ஊசி வளைவுகள் ஆபத்தானவை. சாலையோரம் ஆயிரம் அடி பள்ளங்கள் வரை உள்ளன. அப்படி இருக்கையில் கொண்டை ஊசி வளைவுகளில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாகவும், சாலையில் அரை அடி ஆழம் வரை பள்ளமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

விபத்து தடுப்பு நடவடிக்கை

இரவு நேரங்களில், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த சாலையை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து, தேவையான பராமரிப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

கோடை விடுமுறை காலங்களில் இந்த சாலை வழியாக மூணாறு, கொச்சி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்வார்கள் என்பதால், விபத்து தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story