திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை:
திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அம்சிகாகுழி பகுதியைச் சேர்ந்தவர் வினு (வயது 42). இவருக்கு திருமணமாகவில்லை. வினு அந்த பகுதியில் உள்ள பீரோ தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால், வினு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய வீட்டின் அருகில் இவரது தங்கை குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் வினுவுக்கு தினமும் உணவு கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.
இதற்கிடையே வினு திருமணம் செய்துகொள்வதற்காக பல இடங்களில் வரன் தேடி வந்தார். ஆனால் ஒன்றும் அமையவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகளவில் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் அவரது தங்கை உணவு கொண்டு சென்றபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வினு விஷ குடித்து இறந்து கிடந்தார்.
இதுபற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வினுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் வினு திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.