நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை


நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை
x

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை உள்ளது.

விருதுநகர்

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை உள்ளது.

நீர்நிலைகள்

விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் யூனியன்கள் கட்டுப்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. மேலும் இருக்கன்குடி, ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி உள்ளிட்ட அணைக்கட்டுகளும் இவற்றிற்கான வரத்து கால்வாய்களும் உள்ளன. பரவலாக ஊருணிகளும் உள்ளன.

மாவட்டத்தை பொருத்தமட்டில் பெரும்பாலான பகுதி மானாவரிவிவசாயத்தை நம்பி உள்ள நிலையில் பாசன வசதிக்கு கண்மாய்களையும், அணைக்கட்டுகளையும் நம்பி விவசாயிகள் உள்ளனர்.

ஆக்கிரமிப்பு

அங்கிங்கெனாதபடி எங்கும் அனைத்து நீர்நிலைகளிலும் கருவேலமர ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது தவிர கண்மாய்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் தனியார் ஆக்கிரமிப்புகளும் பரவலாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் கண்மாய்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அணை பகுதிகளிலும் நீரை தேக்கி வைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளால் கண்மாய்களுக்கும், அணை பகுதிகளுக்கும் நீர் வருவதிலும், விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சென்னை, மதுரை ஐகோர்ட்டுகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் அதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

வலியுறுத்தல்

மேலும் குறைதீர்க்கும் நாட்களின் போது கிராமப்பகுதி மக்கள் தங்கள் பகுதியிலுள்ள கண்மாய் உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனுக்கொடுத்தும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும், கிராமப்புற மக்களுக்குமே பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவுப்படியும், பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள கருவேலமரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும், துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story