சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்
ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயக்குடி பேரூராட்சி பகுதியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக வரதமாநதி அணை பகுதியில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆயக்குடி பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த தண்ணீரை காய்ச்சி பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் அதை குடிப்பதற்கு தயங்கி கேன்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும் இந்த தண்ணீரை குடிக்கும்போது, உடல்நல பிரச்சினை ஏற்படுகிறது. எனவே தண்ணீரை சுத்திகரிப்பு செய்து சுகாதாரமான முறையில் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வரதமாநதி அணை பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையான சுத்திகரிப்பு செய்த பின்பே வினியோகம் செய்யப்படுகிறது. எனினும் தண்ணீர் மஞ்சளாக உள்ளதால் நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு செய்யும் உபகரணங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அது மாற்றப்படும் என்றார்.