விற்கப்படாமல் உள்ள சொத்துக்களை மீட்க வேண்டும்
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் விற்கப்படாமல் உள்ள சொத்துக்களை மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மண்டல கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளர் சங்க செயற்குழு கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. வேலூர் மண்டல தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் தருமலிங்கம், மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கனகராஜ் வரவேற்றார்.
இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட 21 மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் முருகேசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் செயல்படுத்தப்பட்ட மனைத்திட்டங்களில் விற்கப்படாமல் நிலுவையுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை மீட்பதற்கும், அதனை இத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் சட்டப்பூர்வ வழிமுறைகளை உருவாக்கி வழங்க வேண்டும்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் அரசாணை எண் 40-ன் படி கடன் முழுவதையும் செலுத்திய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு உடனடியாக அசல் ஆவணங்களை விடுவிக்க வேண்டும். இறந்த வீட்டு வசதி சங்க பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது முடிவில் துணைத் தலைவர் பாபு நன்றி கூறினார்.