ஒரு கட்டுப்பாட்டு கருவியில் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் இணைக்கலாம்;கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தகவல்


ஒரு கட்டுப்பாட்டு கருவியில் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் இணைக்கலாம்;கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தகவல்
x

ஒரு கட்டுப்பாட்டு கருவியில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்த முடியும் என்று கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.

ஈரோடு

ஒரு கட்டுப்பாட்டு கருவியில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்த முடியும் என்று கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.

77 பேர் போட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தற்போது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் (பேலட் அலகு) 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்தும் வசதி உள்ளது. யாருக்கும் ஒட்டு அளிக்க விருப்பமில்லை என்பதை குறிக்கும் நோட்டா-வுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்பதால் 15 வேட்பாளர்கள் பெயர்கள் மட்டுமே ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்க முடியும். 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு எந்திரம் கட்டுப்பாட்டு கருவியுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படும்.

ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேருடன் நோட்டாவும் சேர்த்து 78 வேட்பாளர் பெயர்கள் பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் செய்யும் பணியில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ஒரே கட்டுப்பாட்டு கருவியில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இணைப்பு செய்ய முடியுமா? கூடுதல் கட்டுப்பாட்டு கருவிகள் தேவைப்படுமா? என்ற கேள்விகள் எழுந்து உள்ளன.

5 கருவிகள் பொருத்தலாம்

இதுபற்றி ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சில வகைகள் உள்ளன. நாம் பயன்படுத்தும் வகை எம்-3 என்பதாகும். இது நவீன வசதிகள் கொண்டது. ஒரு கட்டுப்பாட்டு கருவியில் 24 வாக்குப்பதிவு எந்திரங்கள் வரை பொருத்த முடியும். எனவே 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது நமக்கு கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே தேவை. கட்டுப்பாட்டு கருவிகள் ஏற்கனவே உள்ளது. இருப்பினும் தேவைக்கு சற்று அதிகமாகவே கட்டுப்பாட்டு கருவிகளையும் தயார் செய்து இருக்கிறோம். எனவே அதுபற்றிய கவலை இல்லை. இதுபோல் வேட்பாளர் அதிகரித்ததால் வாக்குச்சாவடி அதிகாரிகள் தேவை அதிகரிக்கவில்லை. தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.


Related Tags :
Next Story