அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை


அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை
x

சித்தேரி அரசினர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் சு.கலைஞ்செழியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

சித்தேரி ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் சித்தேரி ஊராட்சி மன்றம் உள்ளது. இதில் சித்தேரி, அண்ணா நகர், கீழ்கண்டிகை, ஆர்.எஸ்.கண்டிகை, மேல்கண்டிகை, இருளர் காலனி, அருந்ததியர் காலனி, வடகளத்தூர் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளது. தலைவராக அதே பகுதியை சேர்ந்த சு.கலைஞ்செழியன் உள்ளார். சித்தேரி ஊராட்சியில் செய்து முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

வளர்ச்சி பணிகள்

சித்தேரி பெரிய தெருவில் ரூ.8 லட்சத்து 6 ஆயிரத்திலும், இருளர் காலனியில் ரூ.6 லட்சத்து 76 ஆயிரம்மதிப்பிலும், சித்தேரி பனந்தோப்பு பகுதியில் ரூ.5 லட்சத்திலும், எல்லை தெருவில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலும் சிமெண்டு சாலை, திரவுபதி அம்மன் கோவில் அருகே ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறு, பிரித்தெருவில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், மேல்கண்டிகை பகுதியில் ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய்கள், சித்தேரி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்தில் சைக்கிள் நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சீரமைப்பு, 17 விதவைகளுக்கு இலவச ஆடுகள், ரூ.10 ஆயிரத்தில் சங்கு ஒலி எழுப்பி சீரமைப்பு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சீரமைப்பு, ரூ.1 லட்சத்தில் நூலக கட்டிடம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு உள்ளது. சித்தேரியில் ரூ.11 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம், ரூ.8 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம், திரவுபதி அம்மன் கோவில் அருகில் ரூ.7 லட்சத்தில் நெற்களம், ரூ.9 லட்சம் மதிப்பில் படவேட்டம்மன் கோவில் குளம் சீரமைப்பு, சித்தேரி, சந்து தெருவில் ரூ.5 லட்சத்திலும், பெரிய தெரு, கிழக்கு பகுதியில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை, ஆர்.எஸ்.நகர் பகுதியில் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறு, ஏரிக்கரை தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

மேல்நிலைப் பள்ளியாக

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் 500 முந்திரி, மாஞ்செடி நடப்பட்டது. வேளாண்மை துறையிடம் இருந்து 960 தென்னங்கன்று, 31 தார்பாலின், 11 விவசாய கிட்டுகள், 32 பேரல், டிரே, 120 பேர்களுக்கு தோட்ட பயிருக்கான விதைகள் வாங்கி கொடுத்து உள்ளேன். கல்வியில் மாணவர்களை ஊக்குவிக்க சித்தேரி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம், 2-ம் இடத்திற்கு ரூ.2 ஆயிரம், 3-ம் இடத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கி ஊக்குவித்து வருகிறேன்.

மேலும் சித்தேரி அரசினர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவும், சித்தேரி ஊராட்சியை குடிசைகள் இல்லாத ஊராட்சியாக மாற்றவும், கால்நடை மருத்துவமனை கொண்டு வரவும் கோரிக்கை வைத்து உள்ளேன். தினமும் காலையில் எழுந்தவுடன் ஊராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டாக சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் தீர்த்து வைத்து விடுவேன். குடிநீர், மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க கூடுதல் குடிநீர் குழாய்களையும், பழுதடைந்த மின்கம்பங்களை உடனுக்குடன் மாற்றி கொடுக்கவும் ஏற்பாடு செய்து உள்ளேன். மின்கம்பம் இல்லாத பகுதிகளில் புதிதாக மின்கம்பம் அமைத்து மின்சாரம் கொடுத்து உள்ளேன். மத்திய, மாநில அரசுகள் மூலமாக மக்களுக்கு எந்த திட்டத்தின் மூலம் பலன் உள்ளது என அறிந்து உடனுக்குடன் பயனாளிகளை அடையாளம் கண்டு நலத்திட்டங்களை பெற்று கொடுத்து வருகிறேன்.

முதன்மை ஊராட்சியாக...

ஊராட்சியில் 2 முறை கால்நடை மருத்துவ முகாம், பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு உள்ளது. சித்தேரி ஊராட்சியை தமிழகத்தின் முதன்மை ஊராட்சியாக மாற்ற நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு, துணைத் தலைவர் ச.தீனதயாளன், மாவட்ட கவுன்சிலர் மங்கையர்கரசி சுப்பரமணி, ஒன்றிய கவுன்சிலர் ஏ.சுப்பிரமணி ஆகியோரின் ஒத்துழைப்போடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ப.தனசேகர், வார்டு உறுப்பினர்கள் டி.அருள், ரா.ஷீலா, ல.ரஞ்சித்குமார், ஜெ.சிவகாமி, வெ.வள்ளி, பா.ஆஷாம்மாள், ரா.ரவிந்தர், வி.அகிலா ஆகியோருடன் இணைந்து செயல்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story