தேனி அல்லிநகரம் நகராட்சியை தரம் உயர்த்தியமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
தேனி அல்லிநகரம் நகராட்சியை தரம் உயர்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி அல்லிநகரம் நகராட்சி கடந்த 1964-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1972-ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1983-ம் ஆண்டு முதல்நிலை நகராட்சியாகவும், 2008-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
நகரமயமாக்கலை கருத்தில் கொண்டும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாகவும் இந்த நகராட்சியை 2023-24-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் தேர்வுநிலை நகராட்சியில் இருந்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்புவது தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். கருத்துரு அனுப்புவது தொடர்பாக கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆணையர் வீரமுத்துக்குமார், துணைத்தலைவர் செல்வம், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், கவுன்சிலர்கள் நாராயணபாண்டியன், பாலமுருகன், கிருஷ்ணபிரபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.