உழவன் செயலியில் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் பெயர் பதிவேற்றம்; கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் உழவன் செயலியில் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் பெயா் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் உழவன் செயலியில் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் பெயா் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
குறைந்த செலவில்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் தங்கள் நெல் பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்கு போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும், குறைந்த செலவில் பணிகளை மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை எந்திரங்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
நெல் அறுவடை காலங்களில் அந்தந்த பகுதிகளின் தேவைக்கேற்ப தனியார் அறுவடை எந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை எந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டிய நிலைமை உள்ளது. வாடகையோடு தரகுக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியது உள்ளதால் அறுவடை எந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
உழவன் செயலியில் பதிவேற்றம்
இதனை தவிர்த்திட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விவசாயிகள் தங்கள் நெற்பயிர்களை குறித்த காலத்திற்குள் அறுவடை செய்ய உதவிடும் வகையில், விவசாயிகள் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியாருக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 909 டயர் வகை மற்றும் 547 டிராக் வகை அறுவடை எந்திரங்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 456 அறுவடை எந்திரங்களின் உரிமையாளர் பெயர், தொலைபேசி எண், எந்திரத்தின் பதிவு எண் போன்ற விவரங்களை மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நமது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 20 டயர் வகை மற்றும் ஒரு டிராக் வகை என மொத்தம் 21 தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் விவரங்களும் உழவன் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்திலுள்ள அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்களை தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு அறுவடை எந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடை பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.