உப்பனாறு தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும்
சீர்காழி அருகே உப்பனாறு தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உப்பனாறு தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உப்பனாறு
சீர்காழி அருகே மேலதேனூர் முதல் திருமுல்லைவாசல் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் உப்பனாறு உள்ளது. இந்த உப்பனாறு திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், கீராநல்லூர், திட்டை, வெள்ளப்பள்ளம், தில்லைவிடங்கன், சட்டநாதபுரம், தென்பாதி, தாடாளன் கோவில், பணமங்கலம், ஆதமங்கலம், நெம்மேலி, தேனூர், புதுத்துரை, கீழமூவர்க்கரை உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலாக உள்ளது.மேலும் மழைக்காலங்களில் பல்வேறு பாசன வாய்க்கால்களில் வரக்கூடிய உபரி நீர் உப்பனாற்றில் தான் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் உப்பனாற்றில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் வடிய வழி இல்லாமல் ஆற்றின் அருகில் உள்ள வயல்வெளிகள் புகுந்து நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
முழுமை பெறாத தூர்வாரும் பணி
இந்த ஆற்றை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உப்பனாற்றை தூர்வார உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இரு கரைகளிலும் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.கரை சீரமைக்கும் பணி முழுமை பெறாமல் இரு கரைகளில் உள்ள வாய்க்கால்கள் சட்ரஸ், தரைப்பாலம் அமைக்கப்படாமல் உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தரைப்பாலம், சட்ரஸ்
மேலதேனூர் முதல் திருமுல்லைவாசல் வரை உப்பனாற்றில் கரை சீரமைக்கும் பணி பெயர் அளவிலேயே நடைபெற்று உள்ளது. பல்வேறு இடங்களில் கரைகள் முறையாக பலப்படுத்தாமல் உள்ளது.மேலும் உப்பனாற்றில் கலக்கும் பல்வேறு வாய்க்கால்களில் சட்ரஸ், தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் வாய்க்காலில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மழைக்காலத்துக்கு முன்பு உப்பனாறு தூர்வாரும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.