அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 170 அடியாக உயர்வு


அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 170 அடியாக உயர்வு
x

தொடர் மழை காரணமாக அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 170 அடியாக உயர்ந்து உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

தொடர் மழை காரணமாக அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 170 அடியாக உயர்ந்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 சென்டி மீட்டர் மழை பெய்கிறது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணையில் சேகரமாகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதேபோல் பிற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் அணைகள் கடல் போல் ரம்மியாக காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே வனப்பகுதிகளில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. நீலகிரியில் அப்பர்பவானி, எமரால்டு, கெத்தை, அவலாஞ்சி, குந்தா, பைக்காரா உள்பட 13 அணைகள் மற்றும் 30 தடுப்பணைகள் உள்ளன. இந்த அணைகளில் பருவமழையின் போது தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

170 அடியாக உயர்வு

இதன் மூலம் 12 மின் நிலையங்களில் தினமும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்பர்பவானி அணை 210 அடி கொள்ளளவு கொண்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 7,470 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. அப்பர்பவானி அணை குந்தா நீர் மின் திட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ளது. தொடர் மழை காரணமாக அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 170 அடியாக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அப்பர்பவானி அணை கடந்த 2000-ம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. கடந்த 2018-ம் ஆண்டு 200 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. நடப்பாண்டில் கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் அணையில் 75 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர் மழை பெய்தால் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மின் உற்பத்தி

பைக்காரா, குந்தா, கெத்தை, அவலாஞ்சி உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற நாட்களில் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

முக்குருத்தி அணையின் 18 அடி கொள்ளளவில் நீர்மட்டம் 16 அடியாகவும், 100 அடி கொள்ளளவு கொண்ட பைக்காரா அணை 60 அடியாகவும், காமராஜ் சாகர் அணை 49 அடி கொள்ளளவில் 34 அடியாகவும், 156 அடி கொள்ளளவு கொண்ட கெத்தை அணை 154 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

போர்த்திமந்து அணையின் 130 அடி கொள்ளளவில் 105 அடியாகவும், 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணை 90 அடியாகவும், எமரால்டு 184 அடி கொள்ளளவில் 80 அடியாகவும், 89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணையில் 87 அடியாகவும் நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது.


Next Story